உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 07:53.45 மு.ப GMT ]
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு திறமைகள் இருக்கும். உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
நாம் எந்த விடயங்களில் நிபுணர் என்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். நிபுணர் என்ற‌வுடம் ஏதோ டாக்டர் பட்டம் வாங்கி ஆய்வு கட்டுரை எல்லாம் சம‌ர்பித்திருக்க வேண்டும் என்று நினைத்து மிரண்டுவிட வேண்டாம்.
எல்லோருக்குமே ஏதாவ‌து ஒரு விடயத்தில் அதிகப்படியான அனுபவமும் விடய ஞானமும் இருக்கும் அல்லவா?அந்த விடயம் தொடர்பான திறனையே இந்த தளம் நிபுணத்துவமாக கருதுகிற‌து.
உதாரணமாக ஒருவர் வருமான வரி எப்படி செலுத்த வேண்டும் என்பதில் கில்லாடியாக இருப்பார். இன்னொருவர் இணையத்தில் புதிய‌ தகவல்களை கண்டுபிடிப்பதில் விஷேட திறன் பெற்றிருப்பார்.
சச்சின் சாதனை பட்டியலை விரல் நுனியில் வைத்திருப்பவர், ரெயில்களின் நேரம் மற்றும் அவற்றின் பாதைகளை அறிந்திருப்ப‌வர், இளையராஜா பாட்டுக்களை வரிசையாக அறிந்திருப்பவர் என்று இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நமது நண்பர்களிலேயே இத்தகைய நிபுணர்களை நாம் அடையாளம் காணலாம். கைத்தொலைபேசியில் புதிய சேவை கண்ணாமூச்சி காட்டுகிறதா, இது போன்ற விடயங்கள் எல்லாம் அவருக்கு தான் அத்துபடி என்று கைத்தொலைபேசி புலியாக விளங்கும் நண்பரை நாடிச்செல்வோம் அல்லவா? சில நேரங்களில் நாமே கூட இந்த விடயம் எல்லாம் எனக்கு தெரியும் என்று நாமறிந்த தலைப்பு குறித்து பெருமைப்பட்டு கொள்வதுண்டு.
இத்தகை நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை தான் ஸ்மார்ட்டரர் ஏற்படுத்தி த‌ருகிறது. நீங்கள் எவற்றில் கில்லி அல்லது கில்லாடி என்ப‌தை இந்த தளத்தின் மூலம் இணைய உலகிற்கு அறிவிக்கலாம்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். நீங்கள் நிபுணர் என்று மட்டும் அறிவித்து கொண்டால் போதாது. அதற்கான ஆதாரம் வேண்டும். அதாவது நீங்கள் நிபுணர் தான் என்ற‌ சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழுக்கு எங்கே போவது என குழம்ப வேண்டாம். இந்த தள‌மே அத்தகைய சான்றிதழையும் வழங்குகிற‌து. ஆனால் அந்த சான்றிதழை பெற நீங்கள் உங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டு திறமையை நிருபிக்க வேண்டும். இது தான் இந்த தளத்தை சுவாரஸ்யம் மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.
அதாவது நீங்கள் எந்த துறை அல்லது தலைப்பில் திறன் உள்ளவ‌ர் என்று கருதுகிறீர்களோ அவை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சரியான பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். அந்த மதிப்பெண் சான்றிதழோடு உங்கள் நிபுணத்துவத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இதை தான் புத்திசாலி என்று நினைக்கிறீர்களா, கேள்விகளுக்கு பதில் சொல்லி அதை நிருபித்து உலகோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் அதை சுவையாக நிறைவேற்றித் தருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த கேள்விகள் தயாரிக்க‌ப்பட்டவை அல்ல. அவை இணையவாசிகளால் உருவாக்கப்பட்டவை. ஆம் இணையவாசிகள் தங்களுக்கு பரிட்சயமான தலைப்பு அல்லது துறைகளின் கீழ் கேள்வி பதில்களை சமர்பிக்கலாம். அந்த கேள்விகள் தான் திறமையை நிருபிக்க விரும்புகிற‌வர்களிடம் கேட்கப்படுகின்றன.
இப்ப‌டி இணையவாசிகள் கேள்விகளை சமர்பிப்பதால் கேள்விகள் ஒரே மாதிரியாக இல்லாமால் புதுப்பிக்கப்பட்டு கொண்டேயிருக்கும். அடிப்படையில் கூட்டத்தின் அறிவை பயன்படுத்தி கொள்வதால் கேள்விகள் அமையும்.
கேள்விகளை எதிர்கொள்வதும் ஈடுபாட்டை ஏற்படுத்தக்கூடிய‌ வகையில் அமைந்துள்ளது. கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிற‌வர்கள் முதலில் தங்களுக்கான தலைப்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மாதிரி கேள்வி ஒன்று கேட்கப்படுகிற‌து. அதற்கு பதில் அளித்து விட்டு மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ளலாம்.
அதன் பிறகு மதிப்பெண்களை பார்த்து விட்டு உங்கள் நிபுணத்துவத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பெருமையை பேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவு போன்றவற்றின் மூலமாகவும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
முதல் சுறில் மதிப்பெண் குறைவா கவலையே வேண்டாம், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யலாம் அல்லது இன்னும் மேம்படுத்தி கொள்ள விரும்பினாலும் மீண்டும் புதிய கேள்விகளை முயற்சிக்கலாம். தங்கள் பங்கிற்கு கேள்விகளையும் சேர்க்க‌லாம். புதிய தலைப்புகளையும் பரிந்துரைக்கலாம். இவையெல்லாம் இதில் ஒருவர் உருவாக்கி கொள்ளும் உறுப்பினர் பக்கத்தில் பிரதிபலிக்கும்.


k

Share/Bookmark